வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை

2014 - 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் 75% தொடக்கப் பள்ளிகளும், 43% மேல்நிலைப்பள்ளிகளும் 40% உயர்நிலைப் பள்ளிகளும் அரசால் நடத்தப்படுகின்றன. மற்றப் பள்ளிகள் தனியார்களால் நடத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் 25.95 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் 19.77 கோடி மாணவர்கள் தொடக்கக் கல்வியும் 3.83 கோடி மாணவர்கள் மேல்நிலைப் படிப்பும் 2.35 கோடி மாணவர்கள் உயர்நிலைப் படிப்பும் படிக்கின்றனர்.

தொடக்கக் கல்வியில் 33% மாணவர்களும், மேல்நிலை வகுப்புகளில் 39% மாணவர்களும் உயர்நிலைப் படிப்பில் 42% மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

மொத்தம் உள்ள பள்ளிகளில் 33% பள்ளிகளில் ஐம்பதிற்கும் குறைவான மாணவர்களும், 54% பள்ளிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களுமே இருக்கின்றனர். ஏறத்தாழ 77% பள்ளிகள் இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்குகின்றன.

ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களில் பத்தில்  ஆறு மாணவர்களே எட்டாம் வகுப்புவரை படிக்கிறார்கள். 47% மாணவர்கள் பத்தாம் வகுப்பைத் தாண்டுவது இல்லை.

இந்த மாணவர்களுக்கு கல்வி கற்ப்பிக்கும் பணியில் 80 லட்சம் ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளிலும் 20 லட்சம் ஆசிரியர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 59% ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணியாற்றினாலும் 8% பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே இன்னும் இருந்து வருகின்றன.

தொடக்கப் பள்ளி அளவில் ஏறத்தாழ 5 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது. 14% அரசுப் பள்ளிகள் குறைந்த பட்ச இலக்கான 6 ஆசிரியர்கள் என்ற எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை. மலைவாழ் பகுதிகளிலும், தொலைதூரத்தில் உள்ள கிராமப் பகுதிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையே நீடிக்கிறது.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது 12% இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவிகிதம் 2011 ஆம் ஆண்டு 74%ஆக உயர்ந்து உள்ளது. இன்று 82.1% ஆண்களும் 65.5%  பெண்களும் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள். ஆனால் உலகளவில் கல்வி பெற்றவர்கள் 82.1% என்று இருக்கும் போது, நாம் கிடைக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

1968 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கைக்கான குழுக்கள் ஆண்டு ஒன்றுக்கு தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தாலும், சராசரியாக 3.5% என்ற அளவிலேயே கல்விக்கான ஒதுக்கீடு இருக்கிறது.

அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளோடு தொடங்கப்பட்ட சர்வ சிக்க்ஷ அபியான்  என்ற தொடர் நிகழ்ச்சியின் மூலமாகவும், எட்டாம் வகுப்பு வரை தடை இல்லாக் கல்வி மூலமாகவும் ஆரம்பநிலைக் கல்விக்கு மாணவர் சேர்க்கை 95% மேலாக உயர்ந்து உள்ளது.

ஆனால் 17,000 கிராமங்களை உள்ளடக்கிய 570 புறநகர் மாவட்டங்களில் மூன்று முதல் பதினாறு வயதிற்கு உட்பட்ட  6 லட்சம் மாணவர்களிடம் பிரதம் என்ற அரசு சாரா அமைப்பு 2014ஆம் ஆண்டு அளித்த அறிக்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. இந்த அமைப்பின் அறிக்கையின் படி ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் சரி பாதிப் பேருக்கு இரண்டாம் வகுப்பிற்கான புத்தகங்களை படிக்கவோ அல்லது இரண்டாம் வகுப்பிற்கான கணித அறிவோ இல்லை என்று தெரிய வருகிறது.

மாணவர்களின் சேர்க்கையில் நாம் அடைந்த முன்னேற்றம் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், மாணவர்கள் கற்கும் அளவு என்பது கவலைக்கிடமாகவே இருக்கிறது.

மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 75% பேரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 50% பேரும் எட்டாம் வகுப்பு மாணவர்களில் 25% பேரும் இரண்டாம் வகுப்புக்கான பாடங்களைப் படித்து புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.    கிராமப்புற மாணவர்களில் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் 32.5% பேர் எழுத்துக்களைக் கூட இனம் காண முடியாமல் இருக்கிறார்கள்.

எந்த ஒரு வேலை நாளிலும் ஏறத்தாழ 25% ஆசிரியர்கள் விடுப்பில் இருப்பது என்பது இந்தக் கற்றல் குறைபாட்டின் ஒரு முக்கியமான காரணமாக் கண்டறியப்பட்டு உள்ளது.

மாணவர்கள் சேர்க்கையில் பெண்குழந்தைகள், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் சேர்க்கை எண்ணிக்கை திருப்திகரமாக இருந்தாலும், கற்றலின் அளவில் பொருளாதார அளவில் பின்தங்கிய மாணவர்களும்,  முதல்தலைமுறை மாணவர்களும் பின்தங்கியே இருக்கின்றனர். இவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்காமல் போய்விடும் சாத்தியக்கூறும் இருக்கிறது. இதைத் தடுப்பதே நமக்கு முன் உள்ள சவால்.

இந்தியாவில் பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் என்பன

1, பாராளுமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள்
2, மாநில அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்
3, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
4, பல்வேறு மாநில அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்
என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

பட்டம் வழங்கும் அதிகாரம் இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளன. மிகச் சிறிய எண்ணிக்கையிலான மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் தனித்து இயங்கினாலும், பெருவாரியான பல்கலைக்கழகங்கள் தங்களோடு இணைந்துள்ள கல்லூரிகள் வழியாகவே கல்வி புகட்டுகின்றன.

இன்றய நிலையில் 46 மத்திய பல்கலைக்கழகங்களும் 128 நிகர்நிலைப் பல்கலைக்கலகங்களும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த நிறுவனத்திற்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கப்படவில்லை.  2014 - 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 711 பல்கலைக்கழகங்களும் 40,760 கல்லூரிகளும் இந்தியாவில் உள்ளன.

1,79 கோடி ஆண்களும் 1.54 கோடி பெண்களும் என்று மொத்தம் 3.33 கோடி மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்குப் பாடம் எடுக்க 14 லட்சம் ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள், அவர்களில் 39% பெண் ஆசிரியர்கள்.

இந்த மாணவர்களில் 37.41% கலைப் பிரிவிலும், 17.59% அறிவியல் துறையிலும் 16.39% வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறையிலும் 28.61% பொறியியல் மற்றும் மருத்துவத் துறையிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மொத்தம் உள்ள கல்லூரிகளில் 63.9% கல்லூரிகள் தனியார் நடத்துபவை, அவற்றில் 58.9% மாணவர்கள் படிக்கிறார்கள். மாநில அரசால் 35.6% கல்வி நிறுவனங்களும் மத்திய அரசால் 0.5% நிறுவனங்களும் நடத்தப்படுகின்றன.

ஆனாலும் உலகளாவிய தரவரிசைப் பட்டியலில் நமது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இடம்பெறவில்லை. 147ஆவது இடத்தில IISc Banglore, 179ஆவது இடத்தில் IIT Delhi, 202ஆவது இடத்தில IIT Mumbai மற்றும் 271ஆவது இடத்தில IIT Kanpur ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.

படித்த படிப்பிற்கான வேலை என்பது பலருக்குக் கிடைப்பதில்லை, அதே நேரத்தில் தகுதியான ஆட்கள் நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை என்ற நிலைதான் உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான தேவையும், படிப்பும் ஒரே திசையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

இதன் பின்புலத்தில் நமது கல்விக் கொள்கை எப்படி அமையவேண்டும் என்பதை பற்றிய புதிய தேசியக் கல்விக் கொள்கை அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது.