ஞாயிறு, 6 ஜூன், 2021

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - ஜூன் 6

கன்னட மொழியின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஞானபீட விருது பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் பிறந்த தினம் இன்று. அவரின் நினைவு தினமும் இன்றுதான். 

1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள் கோலார் மாவட்டத்தில் ஒரு தமிழ் பேசும் ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவர் வெங்கடேச ஐயங்கார். தனது இளமைக்காலத்தில் மாஸ்தி கிராமத்தில் கழித்த ஐயங்கார், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அன்றய மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பணியில் வேலை பார்க்கத் தொடங்கிய ஐயங்கார் 1943 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். வேலை பார்க்கும் காலத்திலேயே ஸ்ரீனிவாஸ் என்ற புனைபெயரில் அவர் எழுதிக்கொண்டிருந்தார்


ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஐயங்கார் பின்னர் கன்னட மொழியில் எழுதலானார். இவர் எழுதிய முதல் நூல் ரங்கன மதுவே 1910ஆம் ஆண்டு வெளியானது. இவரது கேலவு சன்ன கேட்டகளு ( சில சிறுகதைகள் ) என்ற தொகுப்பு நவீன கன்னட இலக்கியத்தின் முக்கியமான படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. தத்துவங்கள், அழகியல், சமுதாயம் பற்றிய பல கவிதைகள், பல நாடகங்கள், மொழிபெயர்ப்பு என்று எழுத்தில் எல்லா தளங்களிலும் ஐயங்கார் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். கன்னட மொழியில் 120 புத்தகங்களும் ஆங்கிலத்தில் 17 புத்தகங்களும் இவரால் எழுதப்பட்டன. 

கர்நாடகத்தின் குடகு பகுதியை ஆண்ட கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன். கட்டுப்பாடற்ற வளர்ப்பினால் ஒரு அரசனுக்குரிய எந்த தகுதியையும் வளர்த்துக் கொள்ளாத மன்னன் இவன். தொடர்ந்து இவன் செய்த தவறுகளால் அரச குடும்பத்தினரும், மந்திரிகளும் மன்னனுக்கு எதிராகத் திரும்ப, ஆங்கிலேயர் வசம் குடகு அடிமைப்பட நேர்ந்தது. இந்தக் களத்தில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் எழுதிய சிக்கவீர ராஜேந்திரன் என்ற புதினம் ஐயங்காருக்கு ஞானபீடப் பரிசைப் பெற்றுத் தந்தது. இந்த புதினத்தை ஐயங்கார் தனது 92ஆம் வயதில் எழுதினார். 

ஒழுங்கீனமும் பொறுப்பற்ற தன்மையும் சிக்கவீர ராஜேந்திரன் போன்ற பல மன்னர்களின் பழக்கமாக இருந்திருந்திருக்கலாம். அதனாலேயே ஆங்கில ஆட்சிக்கு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பதவியை இழந்த ராஜேந்திரன் லண்டன் சென்று விக்டோரியா மஹாராணியைச் சந்தித்து தனது நாட்டை மீண்டும் ஒப்படைக்கக் கோருகிறான். தனது பெண்ணான கௌரியம்மாவை ராணியின் வசத்தில் அவன் ஒப்படைக்கிறான் அங்கே கிருத்துவ மதத்திற்கு மாற்றப்படும் ராஜகுமாரி, தன்னை விட முப்பது வயது மூத்த ஒரு ராணுவ அதிகாரியை மணந்து தனது இருபத்திமூன்றாம் வயதில் அவர் காலமானார். 

தனது 95ஆம் வயதில் காலமான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் நினைவாக கர்நாடக அரசு கன்னட மொழி எழுத்தாளர்களுக்கான விருது வழங்கி சிறப்பிக்கிறது. இவர் வாழ்ந்த வீடு இவரது நினைவில்லமாக செயல்பட்டு வருகிறது. 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம்  வரை

வாழ்க்கை என்பது பலர் நினைப்பது போல முழுவதும் வெண்மையாகவோ அல்லது கறுப்பாகவோ இருப்பதில்லை. இரண்டும் கலந்த சாம்பல் நிறத்தில்தான் அது உள்ளது. அதுபோல்தான் எந்த ஒரு செயலும் எல்லோருக்கும் நலம் தருவதாகவோ அல்லது அனைவருக்கும் பிரச்சனையை உண்டு செய்வதாகவோ இருப்பதில்லை. எந்த அளவிலான நல்லதைச் செய்யவேண்டும் என்று நினைத்துச் செய்யப்படும் செயலும் சிலருக்குத் துன்பம் விளைவிக்கவே செய்யும். தனிமனிதர்களின் வாழ்விலேயே இதுதான் இயற்கையின் நியதி என்றால் பல கோடி மக்களின் வாழ்க்கையை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களின் முடிவுகள் மட்டும் இந்த விதிக்குக் கட்டுப்படாமலா இருக்கும் ?

வரலாறு என்பது இரக்கமற்றது. ஆட்டத்தில் பங்குகொள்ளாமல் நேர்முக வர்ணனை மட்டும் செய்பவர் போல அது உண்மைகளைப் பதிவு செய்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறது. வாழுகின்ற காலத்தில் மிகப்பெரும் ஆளுமைகளாக அறியப்பட்ட பலர் அவர்கள் இறப்பிற்குப் பின்னர் சிறிது சிறிதாகத் தேய்ந்து மக்கள் மனதிலிருந்து மறைந்து போய் விடுகின்றனர். அவர்களின் அடுத்த தலைமுறை அல்லது பின்தொடர்பவர்களின் தவறுகளுக்கான சிலுவையைச் சிலர் பல ஆண்டுகாலம் சுமக்கும் நிலைமையும் பலருக்கு ஏற்படுகின்றது.

பொதுவாகவே பாரதத்தின் புதல்வர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் உண்மையைப் பதிவு செய்வதும், காய்தல் உவத்தல் இன்று மக்களை எடைபோடுவதும் நமது வழக்கமல்ல. நமது தலைவர்கள் அவர்கள் தொண்டர்களுக்குத் தவறே செய்யாத தெய்வப்பிறவிகள், எதிர்முகாமில் இருப்பவர்களுக்கோ அவர்கள் தீமையின் மொத்த உருவமாக மட்டுமே காட்சி அளிப்பவர்கள். இதற்கு நடுவில் உண்மையான உண்மையைத் தேடுவது என்பது கடினமான செயலாகத்தான் இருக்கிறது. ஊடும் பாவுமாக எதிரெதிர் தகவல்களைத் தரும் வெவ்வேறு பார்வையைத் தரும் புத்தகங்களைத் தேடிப்படிப்பது என்பது நம்மில் பலரும் செய்யாத, செய்ய விரும்பாத ஒன்று.

                                            

இந்தப் பின்புலத்தில் ஜோதிஜியின் "ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம்   வரை" என்ற புத்தகம் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போரைத் தொடர்ந்து நாடு முழுவதும் அந்நியர் ஆட்சிக்கு எதிரான சிந்தனைகளும், போராட்டங்களும் கூர் வடிவம் கொண்டன. ஆட்சி அதிகாரத்தை எவ்வளவு வருடங்கள் முடியுமோ அவ்வளவு காலம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய ஆங்கிலேயர்கள் பல்வேறு விதமாக அந்தப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். வற்றாமல் ஓடும் கங்கை நதியைப்போல பல்வேறு மூலப் பொருள்களைத் தந்து, உற்பத்தியான பொருள்களுக்கான பெரும் சந்தையாக விளங்கும் நாட்டை விட்டுவிட்டுப் போக அவர்கள் என்ன மனநலம் குன்றியவர்களா என்ன ?

இந்தப் பின்புலத்தில் உள்ள ஏறத்தாழ நூற்றாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றைத் தொட்டுச் செல்கிறது இந்த நூல். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் நீதிக்கட்சியில் தொடங்கி, காங்கிரஸ் வழியே திராவிட ஆட்சிகளின் வரலாற்றை அநேகமாக எந்தச் சார்பு நிலையும் இல்லாது தமிழக அரசியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் ஆரம்ப நிலை கையேடாக உள்ளது. சென்ற நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளை மிகச் சுருக்கமாகப் பேசும் இந்த நூல், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம் ஜி ராமச்சந்திரன், ஜெயலலிதா என்ற ஐந்து முதல்வர்களின் ஆட்சிக் காலம் பற்றி எழுதி இருக்கிறார். அதோடு மிகச் சுருக்கமாக பக்தவச்சலம் அவர்களின் ஆட்சி பற்றியும் பேசினாலும் பெருவாரியாக இந்த ஐந்து முதல்வர்களின் வரலாற்றின் தொகுப்புதான் இந்த நூல்.

பெரியாரின் பொருந்தாத திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் ராபின்சன் பூங்காவில் திமுக என்ற அரசியல் கட்சியை அண்ணாதுரை தொடங்கினார். அதே திமுகவிலிருந்து விலக்கப்பட்டு எம் ஜி ஆர் தனிக்கட்சி தொடங்கினார். தாங்கள் ஏற்காத செயல்களுக்கான விளைவுகள்தான் இந்தக் கட்சிகளோ அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவை நியாயப்படுத்த இந்தச் செயல்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்களா? என்ற ஒரு விவாதமும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த எழுபதாண்டுக்காலத் தமிழக வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அளிப்பதில் ஜோதிஜி வெற்றியடைந்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து தமிழக அரசியலைப் பின்தொடர்பவர்களுக்கு இந்த நூல் எந்த புதிய தகவலையும் அளிக்காது ஆனால் முப்பது வயதிற்கு உள்பட்ட முதல்முறையாகவோ அல்லது இரண்டாவது முறையாகவோ வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறைக்கு ஓர் அறிமுக நூலாக இது விளங்கும். அப்படியான எண்ணத்தில்தான் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன் என்று ஜோதிஜி கூறியுள்ளார்.

அரசியலில் தொடக்கநிலை வாசகர்களுக்காக நூல் என்பதால் சங்கடமான, பிரச்சனையான விஷயங்களுக்குள் ஜோதிஜி செல்லவே இல்லை. ஆனால் அவைகளுக்கான சில முடிச்சுகள் அங்கங்கே உள்ளன. அதனை இனம் கண்டுகொண்டு அவைகளைத் தேடிப் படிப்பவர்கள் யாராவது உருவானால் சரிதான்.

கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காலத்தை உருப்படியாகச் செலவிட்டு ஒரு நல்ல புத்தகத்தை உருவாக்கிய ஜோதிஜிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். 


திங்கள், 27 ஜூலை, 2020

வீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம் - ஜூலை 27

பாரதநாட்டு விடுதலைக்கு ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பாடுபட்ட பல்வேறு பெண்களும் உண்டு. அந்த வரிசையில் ஒளிவிடும் தாரகையாக விளங்கிய கல்பனா தத்தாவின் பிறந்தநாள் இன்று.


இன்று பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1913ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தவர் கல்பனா தத்தா . தனது பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு கல்பனா கல்கத்தா நகரில் அமைந்துள்ள பெதுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பீனாதாஸ், பிரிதிலதா வடேகர் ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் கல்பனாவும் இணைந்து கொண்டார்.

பபுகழ்பெற்ற புரட்சியாளர் சூர்யாசென் தலைமையிலான குழு ஓன்று ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. கல்பனா அதில் ஐக்கியமானார். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்டகாங் நகரில் உள்ள ஆங்கில ஆயுதக் கிடங்கை புரட்சியாளர்கள் தாக்கி அங்கே உள்ள ஆயுதங்களை கொள்ளை அடித்தார்கள். போராளிகளைக் கைது செய்ய ஆங்கில அரசு தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றில் தாக்குதல் நடத்த போராளிகள் முடிவு செய்தனர். அங்கே இடத்தை வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்பனாவை அரசு கைது செய்தது. பிணையில் விடுதலையான கல்பனா தலைமறைவானார்.

1933ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சூரியாசென் கைது செய்யப்பட்டார். ஆனால் அங்கே இருந்த கல்பனா தப்பியோடி விட்டார்.  1933ஆம் வருடம் மே மாதம் கல்பனா கைது செய்யப்பட்டார். சிட்டகாங் சதி வழக்கு மறுபடி விசாரணைக்கு வந்தது. கல்பனாவை நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. ஆனால் 1939ஆம் ஆண்டு கல்பனா விடுதலை செய்யப்பட்டார்.

இயல்பாகவே அன்றய போராளிகள் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். விடுதலையான கல்பனாவும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1940ஆம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பையை கல்பனா முடித்தார். 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பூரண சந்திர ஜோஷியைத் திருமணம் செய்து கொண்டார். 1943ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்காள பஞ்சத்திலும், பின்னர் தேசப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நிவாரணப் பணிகளியில் கல்பனா செயலாற்றினார்.

கணவர் ஜோஷியோடு இணைந்து கல்பனா சிட்டகாங் ஆயுதக் கிடங்கை கொள்ளையடித்தது பற்றிய தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டார். கொல்கத்தா நகரில் இயங்கி வரும் புள்ளியியல் கல்லூரியில் பணியாற்றிய கல்பனா 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார்.

கால ஓட்டத்தில் கல்பனா தத்தா போன்ற தியாகிகள் நினைவு கொள்ளப்படாமல் போகலாம், ஆனாலும் அவர்களின் தியாகங்கள் வீணாகிவிடாது என்பதில் ஐயமில்லை   

வெள்ளி, 17 ஜூலை, 2020

ரிசர்வ் பேங்க் முன்னாள் கவர்னர் ஐ ஜி படேல் நினைவுநாள் - ஜூலை 17


இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கியின் நான்காவது கவர்னர் இந்திரபிரசாத் கோர்தன்பாய் படேலின் நினைவுதினம் இன்று. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த திரு படேல் 1924ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பிறந்தவர்.

பொருளாதாரத்தில் தனது இளங்கலை பட்டத்தை மும்பை பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்தார். வெளிநாடு சென்று படிக்க, அன்றைய பரோடா மன்னர் இவருக்கு பண உதவி செய்தார். புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இந்தியா திரும்பிய திரு படேல் பரோடா கல்லூரியில் பேராசிரியராகவும் அதன் பின்னர் அதே கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு International Monetary Fund தனது ஆராய்ச்சிப் பிரிவுக்கு படேலை அழைத்துக் கொண்டது. ஐந்தாண்டுகள் அந்தப் பணியில் இருந்த திரு படேல், அதன் பிறகு இந்தியா திரும்பி இந்திய அரசின் நிதிதுறையின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். மீண்டும் 1972ஆம் ஆண்டு ஐநா சபையின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் பணி செய்துவிட்டு, 1977ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவர் ஆளுநராகப் பணியாற்றிய காலத்தில் அன்றய ஜனதா அரசு உயர்மதிப்பீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் ( 1000, 5000, 10,000 ) செல்லாது என்று அறிவித்தது.

தனது நீண்ட பணிக்காலத்தில் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் தேசியமயமாக்கம், தொழில் தொடங்கவும், விரிவு படுத்தவும் மிக அதிகமான அரசின் கட்டுப்பாடு, 100% அந்நிய முதலீடு கொண்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறியது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு படேல் சாட்சியாக இருந்தார்.

அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற படேலை இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரி ( London School of Economics ) தனது இயக்குனர் குழுவில் ஒருவராக நியமித்தது. இந்த பதவிக்கு தேர்வான முதல் இந்தியர் இவர்தான்.

1991ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்ற நேரத்தில், படேலைதான் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும்படி கோரினார். ஆனால் எதனாலோ படேல் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

பொருளாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக திரு படேல் அவர்களுக்கு பாரத அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் படேல் தனது எண்பதாவது வயதில் நியூயார்க் நகரில் காலமானார். 

வியாழன், 16 ஜூலை, 2020

விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசப் அலி பிறந்தநாள் ஜூலை 16


1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாய் நகரத்தில் கூடிய காங்கிரஸ் மாநாடு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. எல்லா முன்னணித் தலைவர்களையும் உடனடியாக பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு 32 வயதே ஆன ஒரு இளம் பெண் தலைமை வகித்தார். மாநாட்டில் அன்று காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றினார். பாரத நாட்டின் மிகப் பெரும் போராட்டம் தொடங்கியது. கூட்டத்தில் புகுந்து வெள்ளையர்களின் காவல்துறை கண்முடித்தனமாக தாக்கியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது. தனது உயிரை துச்சமாக எண்ணி போராட்டத்தை முன்னெடுத்தத அருணா ஆசப்அலியின் பிறந்தநாள் இன்று.


அன்றய பஞ்சாப் மாநிலத்தில் கல்கா நகரில் ஒரு உணவு விடுதியை நடத்திக்கொண்டு இருந்த வங்காளத்தை சேர்ந்த உபேந்திரநாத் கங்குலி - அம்பாலிகா தேவி தம்பதியினரின் மகளாக 1909 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணா கங்குலி. இவர் தாயார் வழி தாத்தா த்ரிலோக்நாத் சன்யால் பிரம்ம சமாஜத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்.

தனது பள்ளிக்கல்வியை லாகூர் நகரிலும் கல்லூரி படிப்பை நைனிடால் நகரிலும் முடித்த அருணா கங்குலி கொல்கத்தா நகரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அலஹாபாத் நகரில் அருணா காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் ஆசப் அலியை சந்தித்தார். புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆசப் அலி பகத்சிங், படுகேஸ்வர் தத் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கா வாதாடியவர்.

இருபத்தி ஒரு வயது வித்தியாசமும், வெவ்வேறு மதம் என்பது அருணாவின் காதலுக்கு குறுக்கே நிற்கவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி அருணா ஆசப் அலியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு காந்தி, நேரு, ராஜாஜிசரோஜினி நாயுடு, அபுல் கலாம் ஆஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆசப் அலி விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததால், அருணாவும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று சிறைத்தண்டனை அனுபவித்தார். 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தை அடுத்து நாட்டின் எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்ட போதும் அருணா விடுதலை செய்யப்படவில்லை. அவரோடு சிறையில் இருந்த எல்லா பெண் கைதிகளும் தாங்களும் சிறையில் இருந்து வெளியே போகப் போவதில்லை என்று போராடியபிறகே அருணா விடுதலை செய்யப்பட்டார்.

1932ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட அருணா ஆசப் அலி, சிறையில் அரசியல் கைதிகள் மரியாதையாக நடத்தப்படவேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கைதிகளின் நிலையில் மாற்றம் வந்தது, அதோடு அருணா அம்பாலா சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு தனிமைச்சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலையான அருணா ஆசப் அலி, சிறிது காலம் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். ஆனால் நாட்டின் கொந்தளிப்பான நிலைமை அவரை அமைதியாக இருக்கவிடவேயில்லை. 1942ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கி வைத்த அருணா தலைமறைவானார். ஆகஸ்ட் புரட்சியின் கதாநாயகி தலைமறைவு வாழ்க்கையில் இருந்தாலும் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை கொழுந்து விட்டு எரியச் செய்துகொண்டுதான் இருந்தார். 

ராம் மனோகர் லோஹியாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் இன்குலாப் என்ற மாதாந்திர பத்திரிகையை வெளியிட்டுக்கொண்டும், வானொலி ஒலிபரப்பின் மூலமாக மக்களிடம் உரையாடிக்கொண்டும் இருந்தார். இன்குலாப் பத்திரிகையின் 1944ஆம் ஆண்டு இதழில் ஆயுதம் ஏந்தியா அல்லது அகிம்சை வழியிலா என்று விவாதித்துக் கொண்டு இருக்காதீர்கள், போராட்டத்தில் இறங்குங்கள், எந்த வழியானாலும் தவறில்லை என்று ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து பாரத நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் அரசியல் வாரிசுகள் இப்போது மார்க்ஸின் மாணவர்களாக மாறிவிட்டார்கள் என்று அன்றய பத்திரிகைகள் எழுதின.

அருணாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு என்று ஆங்கில அரசு அறிவித்தது. 1946ஆம் ஆண்டு அவர் மீதான கைது ஆணை ரத்து செய்யப்பட்ட பின்னர்தான் அருணா வெளியுலகத்திற்கு தன்னைக் காட்டிக் கொண்டார். சூரியனே அஸ்தமிக்காத அரசு என்று பெருமை பேசிக்கொண்ட ஆங்கில அரசு ஒரு பாரதப் பெண்மணியிடம் தோற்று மண்டியிட்டது. பம்பாயில் தொடங்கிய இந்தியா கப்பல் படை கிளர்ச்சியை அருணா ஆதரித்தார். இது இந்த நாட்டின் ஹிந்துக்களுக்கு முஸ்லீம்களுக்குமான உறவை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அருணா ஆசப் அலி காங்கிரஸ் கட்சியின் சோசலிச பிரிவில் தீவிரமாக இயங்கினார். பின்னர் சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியின் முதல் மேயர் பதவியை வகித்தார்.

நேரடி அரசியலில் இருந்து விலகிய அருணா பெண்கள் முன்னேற்றதிற்காக கமலாதேவி சட்டோபாத்யாய உடன் இணைந்து பணி செய்யத் தொடங்கினார்.

1964ஆம் ஆண்டு சோவியத் அரசு அருணாவிற்கு லெனின் அமைதிப் பரிசை வழங்கியது. 1992ஆம் ஆண்டு பாரத அரசு பத்ம விபூஷண் விருதையும் அவர் மரணத்திற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வழங்கி அவரை கவுரவித்தது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அருணா ஆசப் அலி காலமானார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் அருணா ஆசப் அலிக்கு தனியான இடம் ஓன்று எப்போதும் இருக்கும்.  

செவ்வாய், 14 ஜூலை, 2020

தொழிலதிபர் சிவநாடார் பிறந்தநாள் - ஜூலை 14


கணினி மென்பொருள்துறையில் முக்கிய நிறுவனமான HCL நிறுவன அதிபரான திரு சிவ நாடார் அவர்களின் பிறந்தநாள் இன்று. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் அருகே உள்ள மூலைப்பொழி என்ற கிராமத்தைச் சார்ந்தவர் திரு சிவநாடார். இவரது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் தாயார் வாமசுந்தரிதேவி. இவர் தாய்வழி தாத்தா வழக்கறிஞர் சிவந்தி ஆதித்தன், இவரது தாய் மாமன் தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் திரு சி பா ஆதித்தனார்.

தனது தொடக்க கல்வியை கும்பகோணம் நகரிலும், பின்னர் மதுரையிலும் பயின்ற சிவநாடார் தனது பொறியியல் படிப்பை கோவை பி எஸ் ஜி கல்லூரியில் முடித்தார். டெல்லியில் உள்ள DCM நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிய சிவ்நாடார் தனது நண்பர்களோடு இணைந்து 1976ஆம் ஆண்டு மைக்ரோகம்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வடிவில் வந்தது. 1977ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனதா அரசு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றியது. இதனை ஏற்காத கோகோகோலா ஐ பி எம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிட முடிவு செய்தன.

எதிர்காலம் கணினித்துறையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக கணித்த சிவநாடார் கணினி தயாரிப்பில் இறங்க முடிவு செய்தார். ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனம் ஏறத்தாழ இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் தொடக்கத்தில் பாரத நாட்டில் விற்பனையான கணினிகளில் பெரும்பான்மையானவை ஹெசிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

மென்பொருள்துறையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவரும் ஹெசிஎல் நிறுவனத்தில் இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணினி துறையில் பெரும் வேலை வாய்ப்பு இருக்கும் என்பதை கணித்து, அதற்கான பணியாட்களை உருவாக்க சிவநாடார் தன் நண்பர்களோடு இணைத்து NIIT என்ற பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கினார். பாரத நாட்டில் கணினி விற்பன்னர்கள் பலர் உருவானதற்கு இந்த நிறுவனத்தின் பயிற்சி மிக முக்கியமான காரணமாகும்.

தான் நிறுவிய சிவநாடார் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கான இரண்டு இலவசப் பள்ளிகள், அறக்கட்டளை மானியத்தில் இயங்கும் மூன்று பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றை உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடத்தி வருகிறார். சென்னையில் சிவநாடார் அறக்கட்டளை நடத்தும் எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி தமிழகத்தில் உள்ள தரமான கல்லூரிகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. தற்போது சென்னையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்க தமிழக அரசு சிவநாடாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காருக்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, பொருளை உருவாக்குவதிலும், அப்படி உருவாக்கிய பொருளை தேவை உடையவர்களுக்கு அளிப்பதிலும் முன்னுதாரணமாக விளங்கும் திரு சிவநாடார் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  

சனி, 11 ஜூலை, 2020

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள் - ஜூலை 11


வாஜ்பாய் மற்றும் மோதி அமைச்சரவைகளில் அமைச்சராகப் பதவி வகித்த திரு சுரேஷ் பிரபு அவர்களின் பிறந்தநாள் இன்று.

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் பிரபு ஒரு பட்டயக் கணக்காளரும், வழக்கறிஞருமாவார். மஹாராஷ்டிர மாநிலத்தின் ராஜாபூர் தொகுதியில் இருந்து 1996 முதல் 2009 வரை இவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனா கட்சியில் தொடங்கிய பிரபு, தற்போது பாஜகவில் உள்ளார்.

வாஜ்பாய் அரசில் சுற்றுப்புறத்துறை, உரத்துறை, மின்சாரத்துறை, கனரக தொழில்துறை ஆகிய இலாக்காக்களில் பிரபு மந்திரியாகப் பணியாற்றினார். குறிப்பாக இவர் மின்சாரத்துறையில் அமைச்சராகப் பணியாற்றிய போது 2003ஆம் ஆண்டு பல்வேறு சட்டங்களை ஓன்றுபடுத்தி, மாறிவரும் காலநிலைமைக்கு ஏற்ப புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. அநேகமாக திவால் நிலையில் இருந்த பல்வேறு மாநில மின்சார வாரியங்களை மீட்டெடுத்ததில் சுரேஷின் பங்கு மகத்தானது.

மோதியின் அரசில் ரயில்வே, தொழில்துறை, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சுரேஷ் பிரபு பணியாற்றினார். குறிப்பாக ரயில்வே துறையில் இவர் பணியாற்றிய போது பல்வேறு புதிய ரயில்கள், ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பது, ரயில் நிலையங்களில் சூரிய ஒளியை வைத்து மின்சாரம் தயாரிப்பது ஆகிய புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்னும் பல்லாண்டு பூரண உடல்நலத்தோடு வாழ்ந்து பாரத நாட்டுக்கு சுரேஷ் பிரபு தனது பங்கை ஆற்றட்டும் என்று ஒரே இந்தியா தளம் வாழ்த்துகிறது